ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கும் நிலையில், பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் கடந்த 1.4.2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர் களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் துறையை சேர்ந்த கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் ெதாகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராடி வந்தனர்.
பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 2017 ஆகஸ்ட் மாதம் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2017 செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்டனர். அதற்கு பிறகு ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புதிய ஓய்வூதியம் தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் தொடர்பாகவும் போதிய விளக்கம் அளிக்கவில்லை.
இந்த பொதுநல வழக்கு விசாரணை மீண்டும் கடந்த ஜனவரி மாதம் வந்தபோது, அரசுத் தரப்பில் திரும்பத் திரும்ப கால அவகாசம் கேட்கப்பட்டது. கடைசியாக ஒரு நபர் குழு அறிக்கை, ஊதிய முரண்பாடு மற்றும் நிலுவைத் தொடர்பாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜாக்டோ-ஜியோவை அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. அதற்கு பிறகும் அரசுத் தரப்பில் 3 மாதம் கால அவகாசம் கேட்டனர். நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, திருச்சியில் நேற்று முன்தினம் விரிவான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை ஜாக்டோ-ஜியோ நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்பேரில் 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடங்குகின்றனர்.
நாளை மற்றும் நாளை மறுநாள், வட்ட அளவிலும், 25ம் தேதி மாவட்ட அளவிலும் மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர். 26ம் தேதி சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது. இந்த போராட்டத்தில் 56 ஆசிரியர் சங்கங்கள், 200க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சங்கங்கள் பங்கேற்கின்றன. இதையடுத்து, இன்று காலை 10 மணி முதல் வேலை நிறுத்தம் தொடங்குவதால், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் பூட்டப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியாக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலைக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது. நாளை காலை 10.15 மணிக்குள்ளாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் தொடர்பான தகவல்களை தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும். இந்த எச்சரிக்கை எங்கள் வேகத்தை அதிகரித்துள்ளது. 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் ஓயாது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரிய அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஏற்கனவே இதேபோன்ற வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் தனி நீதிபதி வழக்கை விசாரிக்க முடியாது. மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பே போராட்டம் அறிவித்துள்ளனர். இதுவரை என்ன செய்தீர்கள். கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மதுரை கிளையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள். நாளை (இன்று) வழக்கை விசாரிக்கிறேன் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.