3வது நாளாக ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம்: 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது - Asiriyar.Net

Friday, January 25, 2019

3வது நாளாக ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம்: 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது





ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 256 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாளான நேற்று, அரசு ஊரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின. சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனாலும், ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்கிறது. மூன்றாது நாளாக நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், வின்சன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாரின் தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் போலீசார் ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சன் நிருபர்களிடம் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறோம். போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி அரசு சதி திட்டத்தை தீட்டி வருகிறது. நியாயமான 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் மதுரை உயர் நீதிமன்ற கிளை எங்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. அடுத்தகட்ட போராட்டம் குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேராசிரியர்கள் சங்க கட்டிடத்தில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும்.

ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டது இது முதல்முறை. எனவே அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் மதியம் உணவு இடைவேளையின்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் திரண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். இதையடுத்து, 28, 29ம் தேதிகளில் தலைமை செயலகத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Post Top Ad