குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இருப்பது திட்டமிட்ட துரோகம்” - ராமதாஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 20, 2023

குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இருப்பது திட்டமிட்ட துரோகம்” - ராமதாஸ்

 



“பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் அனைத்துமே கடைசி இடங்களைத் தான் பிடிக்கின்றன என்றால் அது அந்த மாவட்டங்களின் தவறு அல்ல... மாறாக தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் தோல்வி தான். வட மாவட்ட பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளுமே உள்ளன என்றால் அது திட்டமிட்ட துரோகம் தானே?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட சற்றுக் கூடுதலாக இந்த ஆண்டில் 91.39 விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் கடந்த 43 ஆண்டுகளாக தொடரும் துயரம் நடப்பாண்டிலும் 44-ஆவது ஆண்டாக தொடருவதுதான் வருத்தம் அளிக்கிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 1980-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இன்று வரை 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன. இம்மாதத் தொடக்கத்தில் முடிவுகள் வெளியிடப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்கள்தான் கடைசி இடத்தை பிடித்திருந்தன. இப்போது வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் அதே நிலை தான் தொடர்கிறது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி 10 இடங்களை பிடித்துள்ள ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், நீலகிரி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள ஏழு மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களைப் பிடித்த கள்ளக்குறிச்சி, தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேனியைத் தவிர மீதமுள்ள 4 மாவட்டங்களும் வட மாவட்டங்கள் ஆகும். கல்வியில் வட தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதற்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என்பதை விட வேறு சான்று தேவையில்லை.


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கடைசி 12 இடங்களில் இருந்த வட மாவட்டங்களில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மட்டும் சற்று முன்னேறியுள்ளன. ஆனாலும் கூட வேலூர் மாவட்டம் சராசரி தேர்ச்சி விகிதமான 91.39 விழுக்காட்டைத் தாண்ட முடியவில்லை. தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் சராசரிக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை தான் பெற்றுள்ளன. அவற்றில் 13 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்ச்சி விகிதங்களில் ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.


தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கான முதன்மைக் காரணம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளன. வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் அடுத்த சில மாவட்டங்களில் செய்ய வேண்டியதை செய்து தென் மாவட்டங்களிலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.


இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளில் அது ஏறவே இல்லை. தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்ச்சி விகிதம் குறைந்தால், அதை குறையாக கருத முடியாது. ஏனென்றால், தேர்ச்சி விகிதப் பட்டியலில் முதலிடம் என்று ஒன்று இருந்தால் கடைசி இடம் என்று ஒன்று இருக்கத் தான் வேண்டும். அது இயல்பானது தான். அதை குறைகூற முடியாது. ஆனால், கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் அனைத்துமே கடைசி இடங்களைத் தான் பிடிக்கின்றன என்றால் அது அந்த மாவட்டங்களின் தவறு அல்ல... மாறாக தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் தோல்வி தான்.


வட மாவட்டங்கள் தொடர்ந்து கடைசி இடத்தில் வருவது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரியும் போது, அரசு அதில் தலையிட்டு அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணங்களை பட்டியலிட்டு அரசுக்கு தந்தாலும் கூட, அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு விருப்பமில்லை என்றால், யார் என்ன செய்ய முடியும்? வட தமிழ்நாட்டில் வாழும் மக்களும், பிற மாவட்டங்களில் வாழும் மக்களும் தமிழக அரசுக்கு ஒரே அளவில் தான் வரி செலுத்துகின்றனர். ஆனால், பிற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கும் அதிகமாக ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் உள்ள நிலையில், வட மாவட்ட பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளுமே உள்ளன என்றால் அது திட்டமிட்ட துரோகம் தானே?


தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை வட மாவட்டங்களில் எவ்வளவு உள்ளன? தென்மாவட்டங்களில் எவ்வளவு உள்ளன? வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளனர்? வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளனர்? வடக்கு மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 'ஆசிரியர்கள்: மாணவர்கள்' விகிதம் எவ்வளவு? வடக்கு மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகள் எவ்வளவு? பிற மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர்கள் பள்ளிகள் எவ்வளவு? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்த சிக்கலில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை அறிக்கையில் தெரியவரும் குறைகள் அனைத்தையும் காலவரையறை நிர்ணயித்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்; செய்வார்கள் என்று நம்புகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Post Top Ad