ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் - நாளை (29.05.23)ஆர்ப்பாட்டம்! - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, May 28, 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் - நாளை (29.05.23)ஆர்ப்பாட்டம்! - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

 

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2023  நாள்: 28.05.2023

**********************

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள்!

கலந்தாய்வு மையங்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!

***********************


தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு தொடக்கக்கல்வித்துறையில் விதிகளுக்குப் புறம்பாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதிர்த்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரியும் நாளை (29.05.2023) தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாடு முழுவதும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட அட்டவணை தொடக்கக்கல்வித்துறையில் இதுவரை 7 முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 


மேலும், தொடக்கக்கல்வித்துறையில் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறவில்லை. மொத்தத்தில் இதுவரை 40 சதவீத கலந்தாய்வு கூட நடைபெறவில்லை.


இவ்வாறு பெரும் பகுதி கலந்தாய்வு நடைபெறாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மற்றும் தேவைப் பணியிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாறுதல் ஆணைகளைத் தொடக்கக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கி வருகிறது. 


இதனால் முன்னுரிமைப்படி தங்களுக்கு பணிமாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு என்ன நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளது.


"கடந்த ஆண்டு உபரிப் பணியிட மாறுதலில் வேறு ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்ற ஆசிரியர்களை சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் ஏற்படும்போது மீண்டும் அவர்களுக்கு சொந்த ஒன்றியத்தில் பணிமாறுதல் அளிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்த தொடக்கக்கல்வித்துறை, அவ்வாறு வழங்காமல் அக்காலிப்பணியிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாக மாறுதல்களை வழங்கி வருகிறது.


மேலும், மாணவர்கள் எண்ணிக்கை உயர்வால் உருவாகியுள்ள கூடுதல் தேவைப் பணியிடங்களில் (Needy post) உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட தொடக்கக்கல்வித்துறை, தற்போது அப்பணியிடங்களுக்கு புதிதாகப் பணியிடம் வழங்கி நிர்வாக மாறுதலில் வேறு மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை நியமித்து வருகிறது. கூடுதல் தேவைப் பணியிடங்களுக்கு புதிதாகப் பணியிடம் அனுமதித்து, அவற்றில் அவ்வொன்றியத்தில் உள்ள உபரி ஆசிரியர்கள் மற்றும் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.


மேலும், தமிழ்நாடு அரசு "ஆசிரியர்கள் பெறும் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை" என்பதை உறுதியான கொள்கை முடிவாக எடுத்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வு மற்றும் ஒன்றிய, மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (29.05.2023) மாநிலம் முழுவதும் அனைத்துக் கலந்தாய்வு மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.


***********************

***********************

இப்படிக்கு

 ச.மயில்                             

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


Post Top Ad