1- 8ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டுக்கான கடைசி வேலை நாள் எது? - பள்ளிக்கல்வித்துறை தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 3, 2022

1- 8ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டுக்கான கடைசி வேலை நாள் எது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்

 





 தமிழகத்தில் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழக அரசு நேற்று அறிவித்தது. மே 5ம் தேதி  பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி, 28ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையும் நடக்கிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதால் அந்த ஆண்டு ஏப்ரலில் பிளஸ்2க்கு மட்டும் பொது தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ்1க்கு கடைசிநாள் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டது.


பத்தாம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெற வில்லை. இதுபோல, மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-22ம் கல்வி ஆண்டும் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே தேர்வுகள் நடத்தப்படவில்லை.


இந்நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 10 மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

* முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கும். அதே தேதிகளில் பிளஸ் 1, வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கும் செய்முறை தேர்வுகள் நடக்கும்.


* பொதுத் தேர்வுகளைபொறுத்தவரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் தேர்வுகள் நடக்கும்.

* இந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 7ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் அறிவிக்கப்படும். இது தற்காலிகமான தேதிகள் தான்.

* தேர்வுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டு பிளஸ் 1 வகுப்பு  தவிர மற்ற வகுப்புகளுக்கு தொடங்கும். பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24ம் தேதி முதல் தொடங்கும்.

* கீழ் வகுப்புகளை பொறுத்தவரையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, 9ம்  வகுப்புக்கு மட்டும் செய்முறைத்  தேர்வு நடக்கும். ஆண்டுத் தேர்வுகள் மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியாகும்.


* 1ம் முதல் 5ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டுக்கான கடைசி வேலை நாள் 2022 மே 13ம் தேதி வரை. கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும்  தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.


அனைத்து பள்ளி மாணவர்களும் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும்.  பத்தாம் வகுப்பில் சுமார் 9 லட்சம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 8 லட்சத்து 49 ஆயிரம் பேரும், பிளஸ் 2 வகுப்பில் 8 லட்சத்து 36 ஆயிரம் பேர் என மொத்தம் 23 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். திருப்புதல் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் இரண்டு செட்களாக அச்சடிக்கப்படுகிறது. அந்த கேள்வித்தாள் வெளியானது என்பது எதிர்பார்க்காத ஒன்று. இது அஜாக்கிரதை. அதனால் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் அது முறைப்படுத்தப்படும்.


நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் என்ற கவுன்சலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள் திருத்தும் போது மாணவர்கள் எழுதியுள்ள விடைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் அதிக கட்டணம் கேட்டு வற்புறுத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தனியாக டியூஷனுக்கு வர வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளோம்.


நீட் பயிற்சி எப்படி வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்த உள்ளோம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிரச்னை தனித்தனியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எதை சரி செய்வது, முக்கியத்துவம் கொடுப்பது என்று எல்லார் நலனையும் மனதில் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் சமூகத்துக்கு நீங்கள் பங்காற்றும் வகையில் மாணவர்களிடம் கருணை காட்டும் வகையில் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களின் மீது தீவிரம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


* பிளஸ் 2 வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கும். அதே தேதிகளில் பிளஸ் 1, வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கும் செய்முறை தேர்வுகள் நடக்கும்.


* பொது தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 7ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் அறிவிக்கப்படும். இது தற்காலிகமான தேதிகள் தான்.







Post Top Ad