7.5% - தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்..!! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - பெற்றோர்கள் நெகிழ்ச்சி - Asiriyar.Net

Post Top Ad


Saturday, November 21, 2020

7.5% - தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்..!! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - பெற்றோர்கள் நெகிழ்ச்சி அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே செலுத்தும் என முதல்வர் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்த 3 மணி நேரத்தில் முதல்வர் அறிவித்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணத்தை முழுமையாக திமுக ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது; தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, இவ்வாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணாக்கர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன் என கடந்த 18.11.2020 அன்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் நான் அறிவித்தேன்.


கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள மாணாக்கர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தினை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை நான் அறிவித்தேன். மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அந்நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும். அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் ஆகும் கனவினை நனவாக்கி, சமநீதியை நிலைநாட்டி, வரலாற்று சாதனை படைத்த தமிழக அரசு, நான் 18.11.2020 அன்றே அறிவித்தவாறு, மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனைவரும் அறிவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad