தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்! இன்றும் விண்ணப்பிக்கலாம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 27, 2019

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்! இன்றும் விண்ணப்பிக்கலாம்!




தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி ஜன.25-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்ததால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து கல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதுநிலைப் பட்டதாரிகள் என ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பணிக்கு வராத 1.50 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறோம்.
இதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

இன்றும் விண்ணப்பிக்கலாம்: இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அலுவலகங்கள், உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும். இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் விவரங்களுடன் அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.

அவர்களை அணுக முடியாவிட்டால், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அனைவருக்கும் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி இயக்கக திட்ட அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பள்ளி கல்வித் துறையின், 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பணியில் சேர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.


420 ஆசிரியர்கள் இடைநீக்கம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில் 420 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ளனர்.

Post Top Ad