பள்ளி மாணவியை கொடியேற்ற வைத்து கவுரவித்த பள்ளி நிர்வாகம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 27, 2019

பள்ளி மாணவியை கொடியேற்ற வைத்து கவுரவித்த பள்ளி நிர்வாகம்!




திருச்செந்துாரில் உள்ள 9-ம் வகுப்பு பள்ளி மாணவி காயத்ரி லெட்சுமியை  தேசியக்கொடி ஏற்ற வைத்து மாணவிக்கு மரியாதை செய்துள்ளது ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி நிர்வாகம்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பந்தல் மண்டபம் அருகில் உள்ளது ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த, 1895-ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி தான் திருச்செந்தூரில் துவங்கப்பட்ட முதல் பள்ளி. நடுநிலைப்பள்ளியான, இங்கு, 225 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.

பொதுவாக, பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினங்களில், தியாகிகள், தலைவர்கள்,பேச்சாளர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கொடியேற்ற செய்வது வழக்கம். ஆனால்,  இப்பள்ளியில் புதுமையாக,  ஆண்டு தோறும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தில், இதே பள்ளியில்,  8ம் வகுப்பு முடித்து, தமிழக பள்ளி  கல்வித்துறை சார்பில் நடத்தப்படும், தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அல்லது மாணவியை அழைத்து கொடியேற்ற வைத்து மரியாதை செய்கிறது பள்ளி நிர்வாகம்.


இது குறித்து இப்பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம், "நாட்டின் 70 வது, குடியரசு தினமான  இன்று, கடந்த ஆண்டு நடந்த இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து, தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி காயத்ரி லெட்சுமியை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றப்பட்டது. அதே போல் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவி ஜெயராம வர்ணாவுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. குடியரசு தினவிழாவுடன், ஆண்டுவிழாவும், பெற்றோர் ஆசிரியர் சங்க விழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி விழாக்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


8-ம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு தேசிய திறனாய்வுத் தேர்வு என்ற தகுதிகாண் வகையில ஒரு தேர்வை நடத்திட்டு வர்றாங்க. இந்த தேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். ஆனா, வெற்றி பெற்றால் மாதம் ரூ.500 வீதம் வெற்றி பெற்ற மாணவர் அல்லது மாணவி 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 4 வருஷத்துக்கு மொத்தம் ரூ.24,000 உதவித்தொகையா கிடைக்கும்.

எங்க பள்ளியில் இந்தத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு நடத்துறோம். கடந்த 3 வருஷத்துல 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று உதவித்தொகை வாங்கிட்டு இருக்காங்க. இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இது போன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து, மரியாதை செய்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தலைமைப் பண்பு வளர்வதோடு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிலைக்கும்." என்றார்.

Post Top Ad