தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 14, 2019

தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது?


நீட் தேர்வில் தமிழக சமச்சீர்கல்வி பாடத்திட்ட மாணவர்கள் படுதோல்வி அடைவது வேதனையை தருகிறது. எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறந்த பாடத்திட்டத்தை வகுத்து தமிழகத்தில்  அமல்படுத்துவதே சர்வதேச கல்வியை தமிழக மாணவர்கள் பெறுவது சாத்தியமாகும் என்று கல்வியாளர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதுதொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு தமிழகம் நீட் தேர்வில்  இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது. 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தனித்தனியே இரண்டு சட்ட மசோதாக்களை  தமிழக அரசு நிறைவேற்றியது. நீட் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முனைப்புடன் இருந்ததால், இந்த மசோதாக்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை. 


2017ம் ஆண்டு தமிழகத்திலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2018ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 1.20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக சிபிஎஸ்சி தெரிவித்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டு தமிழகத்தில்  மாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழகத்தில் நீட் பிரச்னை தொடர்பாக டெல்லியை சேர்ந்த கல்வியாளர் ஒருவரை  தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:


தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஏராளமான போட்டித்தேர்வுகள் நடைபெற தான் செய்கிறது. அந்த தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்று.  நாடு முழுவதற்குமான ஒரு தேர்வு, உங்கள் மாநிலத்துக்கு மட்டும் பிரச்னையாக உள்ளது, அது உங்கள் மாநிலத்தின் பிரச்னை. ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை உங்கள் மாநில அரசால்  உருவாக்க முடியாதா. நம்  நாட்டில் புழக்கத்தில் உள்ள ஐசிஎஸ்இ பாடத்திட்டம் ஒரு தனியார் போர்டால்  நிர்வகிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ போர்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை  நிர்வகிக்கிறது.  வெளிநாடுகளின்  பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டு  பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பாடங்கள் எண்ணிக்கை, மாணவர்கள் கல்வி கற்கும்  திறனை பொறுத்து, அதிகரிக்கப்படுகின்றன. தேர்வில் நேரடி கேள்விகளை  கேட்பதற்கு பதிலாக, மறைமுக  கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடத்தை முழுமையாக  புரிந்து படித்தால் மட்டுமே, குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற முடியும்  என்ற நிலை உள்ளது. 

மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்கும் வகையில்  பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பாடங்களின்  எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள புத்தகத்தின் பின்னால்   இருக்கக்கூடிய கேள்விகளை படித்தாலே தேர்ச்சி பெறலாம் என்ற நிலை உள்ளது என்றார். 


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதில் மாநில அரசும், மத்திய அரசும் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் அமலில் உள்ள பாடத்திட்டங்களை ஆராய்ந்து,  அவற்றில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களுக்கு பொதுவான வினாத்தாள் உருவாக்கப்படுவதாக சிபிஎஸ்இ, நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி தரப்பில் கூறப்படுகிறது. நம் நாட்டில் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள்,  வேறு சில பாடத்திட்டங்களும் அமலில் உள்ளது. தமிழகத்தில் மாநில அரசின் சமச்சீர் கல்வித்திட்டம் அமலில் உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை ஓரளவு  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர, முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இல்லை. அதே நேரத்தில் டெல்லி,  மும்பை,  வடமாநிலங்களின் சில நகரங்களில் நீட் தேர்வுக்கென பிரத்யேக பயிற்சி மையங்கள்  இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு 1,6,9,11 ம்  வகுப்புகளுக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பாடப்புத்தகம் சிபிஎஸ்இ கல்வித்தரத்தில் 70 சதவீதத்தை ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது. ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இக்கு இணையான அல்லது அதற்கும் மேல் தரமான  பாடத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதே தான் தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post Top Ad