இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 16, 2022

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை.!

 




இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு குழு வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறுபணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்து வரும் கற்றல் இடைவெளி கூடுதலாகி பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.


உதாரணமாக, வருவாய்த்துறைக்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்கள் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோருக்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்குத் தருகின்றனர்.


பள்ளிக்குள்ளேயே 'எமிஸ்' (Education Management Information System - EMIS) என்று அழைக்கப்படும் கல்வி தகவல் அளிக்கும் முறையினால் மாணவர்கள் கல்வி குறித்த 32 விதமான தகவல்களை சேகரித்து அவற்றை கணினியில் ஏற்றும் பணியும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.


ஆண்டு முழுவதும் பல காலங்களில் கல்விப் பயிற்சிக்கு செல்லுதல், இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து வரும் பணி, முதன்மைக்கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலகத் தபால்கள் குறித்து கணினியில் பதில் தருதல், விபரங்கள் தரும் பணி, பள்ளிகள் குறித்து பல்வேறு பணி என ஏராளமான கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் அன்றாடம் செய்து வருகின்றனர்.


இன்றைக்கு உள்ள காலச்சூழலில் பள்ளிகளில் குழந்தைகளை உடனிருந்து கவனிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவிட விடாமல், கற்பித்தல் அல்லாத பணிகளைத் தொடர்ந்து கல்வித்துறை ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது கடுமையான பணிச்சுமையை ஏற்றுவதோடு அவர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, கற்பித்தல் பணியையே பாழாக்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பல தவறான பாதையில் மாணவர்கள் பிறழ்ந்து போகும் நிலை அதிகரித்துள்ளது.


இது மட்டுமன்றி இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் முறை சாரா கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, முறை சார்ந்த கற்பித்தல் கற்றல் செயல்முறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்விப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது, மேலும் அவர்கள் மீது பணிச் சுமையை ஏற்றுகிறது. இது மட்டுமின்றி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு எண்களையும் எழுத்துக்களையும் கற்பிக்கிறோம் என்ற பெயரில், கற்றல் செயல்முறை மிகவும் காலம் தாழ்த்தப்படுகிறது. இது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.


இவ்வாறு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கு பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் முறைசார்ந்த கல்வி அமைப்பு செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்றுவதும் இல்லம் தேடி கல்வி, ‌எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் திட்டம் ஆகும். இது தேசிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கையை 2020 பின்பற்றியே கொண்டுவரப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கை மீண்டும் உயிர்பிக்க, கற்பித்தல் கற்றல் செயல்முறையை தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. கோடானு கோடி இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனையில் தவித்து வருகையில் அவர்களுக்கு அந்தப் பணியை வழங்குவதே சரியான தீர்வாகும். மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad