பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000? - முதல்வர் விரைவில் அறிவிக்க வாய்ப்பு - Asiriyar.Net

Wednesday, November 30, 2022

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000? - முதல்வர் விரைவில் அறிவிக்க வாய்ப்பு

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு, தொகுப்புக்கு பதில் ரூ.1,000 ரொக்கம் வழங்கலாமா என தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டன.


அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடர்ந்தது. அத்துடன், கூடுதலாக 2 அடி கரும்பு,ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது. முதலில் ரூ.100 வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக ரூ.2,500 வரை வழங்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபிறகு, இந்த ஆண்டு பொங்கல்பண்டிகைக்கு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.


ஆனால், இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும், கொள்முதல் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. அரசுக்கும் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் 2023-ம்ஆண்டு பொங்கலுக்கு மீண்டும் தொகுப்பு வழங்குவதா அல்லதுரொக்கத் தொகை வழங்குவதாஎன்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


பொங்கலுக்கு, அரிசி, வெல்லம்,முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு பொருட்கள் வழங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நிதித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது.


டிசம்பர், ஜனவரியில்.. இதுதொடர்பாக உணவு, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “முதல்வர்தான் இதுகுறித்து அறிவிக்க வேண்டும். அவர் அறிவித்தால் விநியோகிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றனர். மேலும், டிசம்பர் இறுதி அல்லதுஜனவரி தொடக்கத்தில் பொங்கலுக்கான தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் இதுகுறித்தஅறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.Post Top Ad