அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாமதமாகத் தொடங்கும் நடைமுறை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்று தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) பள்ளி வேலை நாட்கள் முடிந்து தற்போது மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர்.
வரும் கல்வியாண்டில் (2022-23) 1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஜூன் 13 முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதாவது பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரே புதிய மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்துவித பள்ளிகளிலும் கோடை விடுமுறையான மே மாதத்தில் புதிய மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் போட்டி மனப்பான்மையால், அதிக விளம்பரம் செய்து ஜனவரி மாதம் முதலே தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தின. இவை அரசுப் பள்ளி சேர்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பின்னர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2018-ம் ஆண்டு) அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறும் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது.
இதற்கிடையே கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. 2018-19-ம் கல்வியாண்டில் 45.34 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை 2021-22-ல் 52.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், அதற்கு மாறான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இன்றைய அதிவேகமான காலகட்டத்தில் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு பெற்றோரிடம் உள்ளது. ஆனால், நிர்வாக பணிச்சுமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ய நம்மால் முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படுகிறது.
போதிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் மற்றொரு காரணமாக அமைந்து விடுகிறது. இத்தகைய சூழல்களில் பெற்றோர்களை சமாளித்துதான் மாணவர்களை பள்ளியில் தக்கவைக்க முயற்சித்து வருகிறோம். இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்ட பின்புதான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகள் தங்கள் மாணவர் சேர்க்கையை கடந்த ஏப்ரல் மாதமே முடித்துவிட்டு இணையவழியில் ஆயத்த வகுப்புகளை எடுத்து வருகின்றன.
அதேநேரம் அரசுப் பள்ளிகளில் மட்டும் ஜூன் 13-க்கு பின்னரே சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமையும். ஏனெனில், இந்த காலதாமதம் பெற்றோர்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வரும்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்க முடியாது. எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment