அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட புதிய திட்டம்! - Asiriyar.Net

Tuesday, March 15, 2022

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட புதிய திட்டம்!

 





அரசு பள்ளி ஆசிரியர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திட காக்னிசன்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வி துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விடுதலை போராட்ட வீரர் தோழர் ஜீவா என்றழைக்கப்படும் ஜீவானந்தம் பேரனான ம.ஜீவானந்தத்துக்கு (மாற்றுத்திறனாளி) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் சிறப்பு நேர்வாக பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 95 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் 4 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில்நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும், தொழில் நுட்ப மற்றும் கணினி மயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை மற்றும் காக்னிசன்ட் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்ப தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கணினிமய கற்றல் மேம்பாட்டு திட்டத்திற்கு காக்னிசன்ட் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயலாற்றும்.


கலைஞர்  எழுதி, பேராசிரியர் ஜெயபிரகாசால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட “திருக்குறள் உரை” மற்றும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதி, கவுரி கிருபானந்தன் தெலுங்கில் மொழிபெயர்த்த “ஒரு புளியமரத்தின் கதை” ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். இந்நூல்கள் திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 7வது மற்றும் 8வது நூல்கள் ஆகும். இந்நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ஹைதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்தோடு கூட்டுவெளியீடுகளாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளன.


இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மணிகண்டன், காக்னிசன்ட் நிறுவனத்தின் அரசு விவகாரங்கள் தலைவர் கே.புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad