அரசு உதவி பெறும் பள்ளியில் மாற்றுப் பணிக்காக வந்த இரண்டு ஆசிரியைகளின் இடமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அதே பள்ளியில் மாற்றுப் பணியில் அமர்த்தக் கோரி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் அரசு வக்கீல் வைரம் சந்தோஷ் ஆகியோர் ஆஜராகி, ‘‘‘‘மனுதாரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கல்வித் துறைக்கு வந்துள்ளது. குறிப்பாக அந்த இரு ஆசிரியைகளையும் மனுதாரர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கல்வித் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதன்பேரில் வட்டார கல்வி அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில் தான் அந்த இருவரின் மாற்றுப் பணியும் ரத்து செய்யப்பட்டது. அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தினால் தொடர்ந்து துன்புறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’’’ என்றனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இரு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தான் மனு செய்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரரோ குறிப்பிட்ட இரு ஆசிரியைகளின் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டுமென்று கூறுகிறார். இந்த இருவரையும் மனுவில் எதிர்மனுதாரர்களாகவும் சேர்த்துள்ளார். இதன்மூலம் மனுதாரர் மீது இந்த நீதிமன்றத்திற்கு பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.
கல்வி நிறுவனத்தில் ஒரு தலைமை ஆசிரியர் மீதே தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுதுவதைக் கண்டு இந்த நீதிமன்றம் அதிர்ச்சி அடைகிறது. குற்றச்சாட்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இதுபோன்ற நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்ட இந்த நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும்.
சம்பந்தப்பட்ட இரு பெண் ஆசிரியைகளும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு 2 கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தின் அடிப்படையில் மதுரை கீரைத்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இரு ஆசிரியைகளும் இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளிக்கு சென்று உடனடியாக பணியில் சேரவேண்டும்.
இவர்களது பணி பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழக்கு முடியும் வரை தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கும் உள்புகார் குழுவை உடனடியாக அமைத்து புகார் மீது விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை கீரைத்துறை அனைத்து மகளிர் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 14க்கு தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment