தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரம் குறையவில்லை எனவும், அடுத்த 20 நாட்கள் மிக முக்கியமான காலகட்டமாகும் எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் தலைமை செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்று சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் 5 சதவீதத்துக்கு அதிகமாகவுள்ளது.
நோய் தொற்று பாதிப்பில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்பவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. எனவே, அவர்களின் விவரங்களை சேகரித்து எந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த் தொற்று அதிகளவில் உள்ளது என்பதை கண்டறிந்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை. அடுத்த 20 நாள்கள் மிக முக்கியமான காலகட்டம். பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம், கூட்டமாக கடை வீதிகளுக்கு செல்கின்றனர். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்துவது எளிது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா எதிர்ப்பு உயிரி கண்டறியும் பரிசோதனையில் சென்னை உள்பட ஒரு சில இடங்களில் மட்டுமே 30 சதவீதம் பேருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment