* அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பார்த்தல் உட்பட பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
* காலத்திற்கேற்ப மாற்றங்களை புகுத்தி, 12ம் வகுப்பு வரையிலான கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மற்றும் கலைத் திட்டத்தின்படி 2,3,4,5,7,8,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் 2019-20ம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாரிக்கப்பட்டு உள்ளது.
* அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு ₹75 ஆயிரம் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21ம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ், 10 கோடியே ₹2 லட்சம் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64,885 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
* 1965ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு நிர்வாக கட்டிடத்துடன், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககத்திற்கான அலுவலக கட்டிடமும் சேர்த்து 3,534 சதுர மீட்டர் பரப்பளவில் ₹10 கோடி செலவில் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும்.
* கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 98 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 92 அரசு கல்லூரிகள் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த 92 அரசு கல்லூரிகளுக்கு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு மானியமாக ஆண்டொன்றிற்கு ₹58 கோடி வீதம் 2 ஆண்டுகளுக்கு ₹116 கோடி வழங்கப்படும்.
* கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 10 வகுப்பறை கட்டிடங்கள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உட்பட பணிகள் ₹30 கோடியில் மேற்ெகாள்ளப்படும்.
* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் ₹20 கோடியில் நிறுவப்படும்.
* பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்கலைக்கழக அறிவியல் கருவிமயமாக்கல் மையம் ₹5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.