10ம் வகுப்புக்குபின் என்ன படிக்கணும்? - Asiriyar.Net

Sunday, April 14, 2019

10ம் வகுப்புக்குபின் என்ன படிக்கணும்?

பொதுவாக, பிளஸ் 2 முடித்த பின்பே உயர்கல்வி குறித்து சிந்திக்கின்றனர்


 ஆனால், பத்தாம் வகுப்புக்குபின், மேல்நிலை துறைத்தேர்வில் விழிப்புணர்வு இன்றி செயல்படுவதால், பல மாணவர்களின் உயர்கல்வி கனவு, தடம் மாறிவிடுகிறது


மேல்நிலை தேர்வை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் அறிவியல் பாடப்பிரிவு, குறைந்த மதிப்பெண் எடுத்தால் கலைப்பாடப்பிரிவு, சராசரிக்கும் குறைவாக எடுத்தால் தொழில்படிப்பு என, பொதுவான போக்கு காணப்படுகிறது



இது முற்றிலும், தவறான அணுகுமுறை


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, தேர்ச்சி பெறாதவர்களும் மேற்கொண்டு படிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இம்மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மேற்படிப்பை தொடரலாம்


குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள், ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்களில் சான்றிதழ் படிப்பில் சேரலாம்


இங்கு ஓராண்டு படிப்பை முடித்தவுடன் எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் மெக்கானிக், ஏ.சி., மெக்கானிக் என பிரிவுகள் பல உள்ளன. இரண்டாவதாக பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம்


டிகிரி படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேரலாம். பெரும்பாலான மாணவர்கள், இதன்படியே உயர்கல்வியை தொடர்கின்றனர்


கல்வியாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''பத்தாம் வகுப்பிலேயே உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டும் அறிவியல் பாடம் எடுத்து பலனில்லை


 பத்தாம் வகுப்பில், 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்த பலர், பிளஸ் 2 கணிதத்தை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்


 அவரவர் ஆர்வம், புரிதல், எதிர்கால திட்டமிடலை கொண்டு, பிளஸ் 1 பிரிவை தேர்வு செய்ய வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலையின்றி, ஐ.டி.ஐ., மூலம் தொழில் படிப்புகளை கற்கலாம்,'' என்றார்

Post Top Ad