குழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக- அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 27, 2019

குழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக- அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்



குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

அதே வேளையில் முன்பருவ கல்வி கற்கப்போகும் மூன்று வயது குழந்தைகளின் மனநிலையை சரியாக, அறிந்து உளவியல் ரீதியாக அணுகிட "மாண்டிசோரி" பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்பதற்காக அவர்களைப் பணிமாற்றம் செய்வது எவ்விதத்தில் சரியாக அமையும்?

காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி உபரி ஆசிரியர் பணியிடங்களை சமன் செய்யமுடியும். மேலும் குழந்தைகளின் உடல் நலம், மனநலத்தைக் கருத்தில் கொண்டு முன்பருவக் கல்வியான மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தவேண்டும்.


இடைநிலை ஆசிரியர்களை நியமித்தால், மாண்டிசோரி பயிற்சி முடித்து தற்போது வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஓராண்டு காலப் பயிற்சியான "மாண்டிசோரி" பயிற்சியை, இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியளித்து எடுக்கச் சொல்வது முறையான பயிற்சிக்கு இணையாக அமையாது.

குழந்தையை மையப்படுத்தும் கல்வி முறையாக அமைந்திடவும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் எண்ணத்தினை மறுபரிசீலனை செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அரசை வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Post Top Ad