வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 26, 2019

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்

சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை கணக்கிடும்போது, வேலைநிறுத்த நாட்களை கழிக்க வேண்டுமென கருவூலத் துறை தெரிவித்துள்ளது. ஊதியப் பட்டியலை திருப்பி அனுப்பியதால் இந்த மாதம் இறுதியில் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜன.22-ல் முதல் ஜாக்டோஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த சில நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை மட்டும் அரசு ரத்து செய்தது. ஆனால் வழக்கைத் திரும்ப பெறவில்லை. வேலைநிறுத்த காலத்துக்கான ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிதியாண்டின் 2-வது காலாண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கணக்கிட்டு ஊதியப் பட்டியல் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஊதிய உயர்வில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை கழிக்க வேண்டுமெனக் கூறி, அப்பட்டியலை கருவூலத் துறை திருப்பி அனுப்பியது. மேலும் மீண்டும் ஊதியப் பட்டியல் தயாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால், இந்த மாத இறுதியில் ஊதியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ரா.இளங்கோவன் கூறியது: அரசு ஊழியர், ஆசிரியர்கள் பலமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அந்த காலத்துக்குரிய ஊதியத்தைத்தான் பிடிப்பர். இந்த முறை ஊதிய உயர்வையே பிடித்தம் செய்கின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் பணி விதிகள்படி ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் கூட ஊதிய உயர்வை பிடித்தம் செய்யக் கூடாது. ஒழுங்கு நடவடிக்கையில் ஊதிய உயர்வை பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் எந்த அதிகாரப்பூர்வமான உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் ஊதிய உயர்வை பிடித்தம் செய்கின்றனர். கருவூல மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகத்தில் கேட்டால் முறையான பதில் இல்லை என்றார்.

Post Top Ad