ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 7, 2020

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு.

 





ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது.




இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் கூறுகையில், ''ஓய்வூதியர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரசு கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.




வயதான பல ஓய்வூதியர்கள் நேரில் சென்று சான்றிதழ் சமர்ப்பிப்பதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.





ஓய்வூதியர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து கை விரல் ரேகையை பதிவு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து விடலாம். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் உடனடியாக ஓய்வூதியர்களின் செல்போனுக்கு வந்துவிடும்.




இந்த சேவையைப் பெற 70 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி தபால்காரரை அணுக முடியாத ஓய்வூதியர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று இந்த சேவையைப் பெறலாம். தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஓய்வூதியர்கள் அனைவரும் தபால்துறையின் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

Post Top Ad