பள்ளி திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 11, 2023

பள்ளி திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

 

கல்வியாண்டில் நாளை பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி


புதிய கல்வி ஆண்டு 2023-24, நாளை அதாவது ஜுன் 12-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இப்புதிய கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கின்ற மாணவச் செல்வங்களுக்கும் அவர்களை சிந்தனையாலும், செயலாலும் கற்றல் கற்பித்தலில் கரம் பற்றி அழைத்துச் செல்ல இருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்கிறேன்.


*கல்வி சிறந்த தமிழ்நாடு" என்றார் மகாகவி. அதனை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மாண்புமிகு முதல்வரின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் நமது பள்ளிக் கல்வித் துறை கடந்த இரண்டாண்டுகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறது.

இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், கலைத் திருவிழா என்று பள்ளிக் கல்வித் துறை முன்னெடுக்கும் முத்தான திட்டங்களால் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுகிறது நமது துறை.


உண்மையான கல்வி என்பது ஒரு குழந்தையின் உடல்-மனம்-ஆண்மா ஆகிய மூன்றின் ஒட்டுமொத்த ஆகச் சிறந்த மேம்பாட்டை வெளிக்கொணர்வதே ஆகும் என்றார் தேசத் தந்தை மகாத்மா. கல்வி என்பது அறியாமையையும், மூடத்தனங்களையும் அகற்றுவதாகவும், அறிவை அள்ளிக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்.


போட்டியும் பொறாமையும் பொய்ச்சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே என்றார் பேரறிஞர் அண்ணா.

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால், அதைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம் என்றார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.

முத்தமிழறிஞரின் நூற்றாண்டு விழாக்காணும் இக்கல்வியாண்டில் அவரின் சிந்தனைகளை மனதில் கொண்டு செயல்படுவோம். "எல்லார்க்கும் எல்லாமும்" என்பதே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம். அதனை அடைவதற்கு கல்வி ஒன்றே சாதனம்.


எனவே,

நமது அரசு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எப்போதும் துணை நிற்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கற்கவும், ஆசிரியர்கள் நன்னம்பிக்கையோடு கற்பிக்கவும் அனைவரின் எதிர்காலமும் சூரியனாய் பிரகாசித்திட வாழ்த்துகிறேன்.

இந்தக் கல்வியாண்டு சிறப்பாய் அமைய சீர்மிகு வாழ்த்துக்கள்.






Post Top Ad