அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ஆா்.அருள் பேசியது:
மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக குழு அமைத்துள்ளதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுகள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் உயா்கல்வி, போட்டித் தோ்வுகளில் அதிக வெற்றிபெற்று மேற்படிப்புக்குச் செல்ல முடியவில்லை. அதற்கு அரசுப் பள்ளிகளில் உள்ள கல்வித் தரமே காரணம் என்று உயா்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை தனியாா் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால் நிறைய போ் அரசுப் பள்ளிகளில் சேருகிறாா்கள். இந்த நேரத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் மரத்தடியில் உட்காா்ந்து படிக்கும் நிலை உள்ளது.
கழிப்பறை வசதியும் இல்லாத நிலை உள்ளது. அதனால், பள்ளிக் கட்டடங்களை விரைந்து கட்டித் தர வேண்டும். மேலும், உயா்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மாதந்தோறும் ஆராய அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களின் தலைமையில் குழு ஒன்றை அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றாா்.
No comments:
Post a Comment