1-5ம் வகுப்புக்கு சனிக்கிழமை விடுமுறை: அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல் - Asiriyar.Net

Tuesday, April 19, 2022

1-5ம் வகுப்புக்கு சனிக்கிழமை விடுமுறை: அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்

 




ஒன்று முதல் 5ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் கோடைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்  என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தொடக்கவிழா நாளை நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மேலாண்மைக் குழுக்களை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஆய்வுகளை, அதிகாரிகளுடன் இணைந்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து வருகிறார்.


அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு அரசுப் பள்ளியும்  தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்கு வருவது மட்டும் அல்லாது, பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் பங்கு கொள்ள வேண்டும். இதற்காக பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இதற்காக 23 லட்சம்  பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது. மே மாத பொதுத் தேர்வுக்கு அரசு தயார் நிலையில் இருக்கிறது. தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்கள் தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.


அரசுப் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இந்த ஆண்டு முதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், கழிப்பறைகள், வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியாளர்களை நியமிக்கும் பணி நடக்கிறது. இவர்களுக்கு ஊதியம்  வழங்க ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த  ஆண்டு 2,969 பேர் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் சேர்வோர் போலி சான்றுகளை வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது, சான்றுகள் சரிபார்ப்பில் சான்றுகள் போலி என்றுகண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஒரே ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 6 லட்சத்து 26 ஆயிரம்  மாணவர்கள் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதன் பொருட்டு ஆசிரியர்கள் தேவை எங்கு அதிகம் தேவையாக உள்ளது. அதற்கு ஏற்ப முதற்கட்டமாக 9,494 பேர் செய்யப்பட உள்ளனர். பின்னர் ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் உறுதி செய்யப்படும். கோடை காலம் என்பதால்  சனிக் கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதனால் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad