கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டதால் திரும்பவும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது முன்னமே அறிந்த ஒன்று தான்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வரும் மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது,தகாத வார்த்தைகளால் திட்டுவது,மது அருந்துவது, ஆசிரியர் வகுப்பில் இருக்கும்போது மதிக்கமால் ஆட்டம் போடுவது, பேருந்துகளில் படியில் தொங்கி பயணிப்பது போன்ற வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது..
இந்த நிலை நீடித்தால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் சமூகத்தின் நிலை அச்சம் தருவதாக அமையும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை. .இதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களை மன்னிப்பதோ அல்லது சஸ்பெண்ட் செய்வதோ தற்காலிக தீர்வு தானே ஒழிய நிரந்தர தீர்வு அல்ல
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று பெரும்பாலானவர்கள் கருதினாலும், உண்மையில் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள்.அது மட்டும் அல்ல இது போன்ற வீடியோக்களை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுடைய வீடியோக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பகிரப்படுகிறது.ஏதோ ஒரு அரசுப்பள்ளி மாணவன் என்ற எண்ணத்தை விட்டு நம் வீட்டு பிள்ளைகளாக யோசிக்கும் பட்சத்தில் இது போன்ற வைரல் வீடியோக்கள் குறைய வாய்ப்புள்ளது.
இது போல தங்களைப் பற்றி வீடியோக்கள் பொதுவெளியில் பகிரப்படும் போது இரண்டு விதமான தாக்கங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். ஒன்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களை சினிமா கதா நாயகர்களைப் போல கருதி அதே நிலை தொடர்வது அல்லது தன்னைப் பற்றி உறவினர்கள் மத்தியில் ஒரு அவப்பெயர் என்று கருதி மனரீதியான உளைச்சல் ஏற்பட்டு மேற்கொண்டு படிப்பது தடைபடுவது.
மாணவர்களை கொரோனோவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்றே பிரிக்கலாம்.அவ்வளவு மாற்றங்கள்.இதற்கு முந்தைய நாட்களில் மாணவர்கள் செய்யும் தவறுகள் அவன் வயதுக்கு ஏற்ற தவறுகள் தான் "அந்த வயதில் அப்படித்தான் இருப்பாங்க" என்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்திகொண்டு தான் இருந்தார்கள் அப்போது அது சிக்கலாகத் தோன்றவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலையே மாணவர்களை அணுகும் போது அது மேலும் சிக்கலாகிறது..
இப்போது மாணவர்கள் நடத்தை அவர்கள் வயதுக்கு மீறியதாக, பெரும் அச்சம் தரக்கூடியதாக உள்ளது.காரணம் இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களில் சிலர் தேவையில்லாத பழக்கங்களை கற்றுககொண்டனர்.சிலர் அப்படியே தேங்கிவிட்டனர்.பலர் பின்தங்கிவிட்டனர்.ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில் அமர்வதற்கே சிரமப்படுகிறார்கள், பிறகெப்படி கவனிப்பது..மொத்தத்தில் சிதிலமடைந்த கலைக்கூடம் போல தான் நிலை.அதை திரும்ப கட்டவும் முன்பை விட புதுமையாக கட்டமைக்கவும் ஆசிரியர்களால் முடியும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
ஆனால் ஆசிரியர்களுக்கே அச்சுறுத்தலாக மாணவர்கள் அமையும் போது என்ன செய்ய முடியும்.சமீபத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆசிரியர்கள் முறையிட்டதைக் பத்திரிகை செயதிகளில் பார்த்தோம்.ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி வீட்டிற்க்கு அடுத்து பள்ளியே பாதுகாப்பான இடம்.அங்கு பாதுகாப்பு இல்லை என்று ஆசிரியர்கள் முறையிடுவது ஒரு சமூகத்தின் அவலம்.அது மட்டுமல்ல ஒரு மாணவனை சஸ்பெண்ட் செய்வது என்பது அது ஆசிரியர்களுக்கான தோல்வி.
இதற்கு என்ன தான் தீர்வு?
ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை போல "அடிச்சா திருப்பி அடிக்காத அந்த மூன்று பேர் ல ஸ்கூல் வாத்தியார்'என்பது போல ஆசிரியர்களுக்கோ பரிதாபமான கையறு நிலைதான்.(ஆசிரியர்கள் பாவம் என்றால் உடனே அவர்களுக்கு தான் சம்பளம் அதிகம் என்று தோள்களை உயர்த்திக்கொண்டு வரவேண்டாம்)
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்,பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையும் தாண்டி தங்களது பணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றொரு நிலை ஆசிரியர்களுக்கு
மாணவர்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டியவர்கள்.மாணவனின் எதிர்காலம் பள்ளிகளில் தான் அடங்கி இருக்கிறது.அவர்கள் அங்கு தான் கற்றுத்தரப்படுகிறார்கள், கற்றுக் கொள்கிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட பள்ளிகளிலே மாணவர்களின் எதிர்காலம் முடிந்துபோய்விடக்கூடாது.நல்லதொரு சமுதாயம் உருவாக மாணவர்களை அல்லனவற்றிலிருந்து நல்லனவற்றிறக்கு வழிநடத்த பள்ளிக்கல்வித்துறை இது சார்ந்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் .பிரச்சனைக்குரிய மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க பள்ளி அளவிலான குழுக்களை நியமிக்கவேண்டும்.
பதின்பருவ வயதுகளில் ஏற்படும் மனவெழுச்சி சார்ந்த பிரச்சினைகளில் இருந்து அவர்களை மாற்ற விளையாட்டு, வாசிப்பு,மற்றும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளை வழங்கலாம். பள்ளிக்கல்வித்துறையோடு மக்கள் நல்வாழ்வு துறை, காவல்துறை ஆசிரியர்கள் சேர்ந்து இதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் வாரம் ஒருமுறை வீடியோக்கள் வெளிரும் இப்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சி மெல்ல பிறகு பழகிவிடும்! மாணவர்கள், ஆசிரியர்கள் நிலை என்னவாகும்.?
தே.சரவணக்குமார்
பட்டதாரி ஆசிரியர்
No comments:
Post a Comment