ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் மகளின் வாயில் பூச்சி மருந்து ஊற்றி தந்தையே கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தந்தை, தாயிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த ஒரு குடியிருப்பை சேர்ந்த அமுதா (15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் அவர் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை என அவரது தந்தையிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் அமுதா ஊர் சுற்றி வந்தது அமுதாவின் தந்தைக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், மகளை கடுமையாக கண்டித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். ஆத்திரம் தலைக்கேறியதால் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து வந்து மகள் அமுதாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் அமுதா மயங்கிவிழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அமுதாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அமுதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவின் தந்தை, தாயிடம் விசாரித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லாமல் வாலிபருடன் ஊர் சுற்றியதால் தந்தையே மகளின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment