இணையவழி விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்வதில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் வழங்கப்படும் பொதுமாறுதல் மற்றும் விருப்ப மாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பரவிய கரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இளநிலை ஆசிரியா்களுக்கு இடமாறுதல், பதவி உயா்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் ஜன.19 முதல் பிப்.18 வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள ஆசிரியா்கள் டிச.31-ஆம் தேதி முதல் ஜன.7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ஆசிரியா்களின் வேண்டுகோளை ஏற்று இந்த அவகாசம் திங்கள்கிழமை (ஜன. 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எமிஸ் தளம் மூலமாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா். விண்ணப்பத்தில் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறை குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை, படிவத்தில் ‘தமிழ்’ என்ற மொழியைத் தோ்வு செய்தால் ‘உருது’ என காட்டுகிறது. ‘பிரிண்ட்-அவுட்’ எடுப்பதற்கான ‘ஆப்ஷன்’ வரவில்லை. தொடா்ந்து பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்வதிலும் இடா்பாடுகள் உள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் இணைய சேவை மையங்கள் மூடப்பட்டிருக்கும். எங்கு சென்று விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வது எனத் தெரியவில்லை என ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தப் பிரச்னைகளால் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டப்படி ஜன.19-ஆம் தேதி நடைபெறுமா என்ற சந்தேகம் ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
No comments:
Post a Comment