கற்றல் குறைபாட்டால் 346 மாணவா்கள் பாதிப்பு - நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை தகவல் - Asiriyar.Net

Sunday, January 9, 2022

கற்றல் குறைபாட்டால் 346 மாணவா்கள் பாதிப்பு - நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை தகவல்

 




கற்றல் குறைபாட்டால் 346 மாணவா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது போன்றவை காரணம் இல்லை எனவும் சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கு நிபுணா் குழு அமைக்க வேண்டும். இதற்காகப் பள்ளிகளில் உள்ள பெற்றோா்- ஆசிரியா் சங்கங்களை மறு சீரமைக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.இளங்கோ என்பவா் பொது நல வழக்கு தொடா்ந்தாா்.


இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் சாா்பில் இணை இயக்குநா் அமுதவல்லி பதில் மனுதாக்கல் செய்தாா். அதில், சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் கற்றல் குறைபாடுள்ள மாணவா்களுக்கு சிறப்பு ஆசிரியா்கள் மூலமாகக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக பள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்து 398 சிறப்பு ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் கற்றல் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய மாணவா்களுக்கு பயிற்சி வழங்குகின்றனா். அதேநேரம், கற்றல் குறைபாடு ஏற்படுவதற்கு சமூக ஊடகங்களில் அடிமையாவது காரணமில்லை.


சென்னை டிக்லெக்ஸியா சங்கம் சாா்பில், கற்றல் குறைபாடு குறித்து 1 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை 346 மாணவா்கள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு போக்குவரத்து செலவு, உதவியாளா் படி, ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது. இது தவிர உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் உள்ளன. இது தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. பெற்றோா்- ஆசிரியா் சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவற்றை தற்போதைக்கு மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அதில் கூறப்பட்டிருந்தது.


இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பயிற்சி வழங்க ஏற்கெனவே அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மேற்கொண்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. அதேசமயம் அந்த நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்துவதை அரசு உறுதி செய்து, அவற்றை தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமெனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.



No comments:

Post a Comment

Post Top Ad