சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் பதிவேட்டில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில், அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே அவ்வாறு செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்திருக்கிறார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கோவிந்தசாமி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து சுயற்சி முறையில் வகுப்புகளுக்கு வரவழைக்க பள்ளி நிர்வாகம் திட்டமிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பல ஆண்டுகளாக பள்ளியின் பதிவேட்டில் சாதிவாரியாக மாணவர்களை பட்டியலிட்டதும் தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் தர பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு சென்னை மாநகர இணை ஆணையர் சினேகா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பட்டியல் இன மாணவர்களுக்கு அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே சாதி ரீதியாக பிரித்து அவர்களின் பெயர்கள் பதிவேட்டில் எழுதப்பட்டதாக தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி விளக்கம் அளித்திருக்கிறார்.
தற்போது மாணவர்களின் பெயர்கள் ஆங்கில அகர வரிசைப்படி பதிவேட்டில் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சாதி ரீதியாக பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் தலைமை ஆசிரியர் தனது விளக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment