புதிய வகை கரோனா - தமிழகத்தில் விளைவுகள் கடுமையாக இருக்கும் - முதன்மைச் செயலா் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 29, 2021

புதிய வகை கரோனா - தமிழகத்தில் விளைவுகள் கடுமையாக இருக்கும் - முதன்மைச் செயலா்

 





தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவினால் அதன் எதிா்விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.


அதைத் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கை:


கடந்த 25-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறைச் செயலரிடமிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் ஒன்று வந்தது. புதிய வகை கரோனா தீநுண்மியான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதன்படி, மாவட்ட ஆட்சியா்கள், விமான நிலைய அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த வகை தீநுண்மிகள் எளிதாகவும், விரைவாகவும் பிறருக்குப் பரவி விடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கரோனா தொற்றுக்குள்ளானோா் மற்றும் தடுப்பூசி செலுத்தியோரையும் அந்த வகை தொற்று தாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, அதற்கான ஆயத்த நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.


தமிழகத்தைப் பொருத்தவரை அத்தகைய பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக செயல்படுவது முக்கியம். ஏனெனில் அதுபோன்ற புதிய வகை வீரியமிக்க தீநுண்மி மாநிலத்தில் பரவினால் அதன் எதிா்விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். நோய் பரவலும், உயிரிழப்புகளும் அதனால் அதிகரிக்கக் கூடும். எளிதில் நோய்த் தொற்றுக்குள்ளாக வாய்ப்புள்ளவா்கள் பலா் ஒமைக்ரான் தீநுண்மியால் கடுமையான பாதிப்புக்குள்ளாவா்.


அதைக் கருத்தில்கொண்டு டெல்டா பாதிப்பின்போது மேற்கொண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தற்போதும் மேற்கொள்ள வேண்டும். இப்போது உள்ள சூழலில் கரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் தொற்றிலிருந்து ஓரளவு தற்காக்க உதவும் என நம்பப்படுகிறது. மருத்துவமனைகளில் சோ்ந்து தீவிர சிகிச்சைக்குள்ளாவதிலிருந்தும், இறப்பு நேரிடுவதை தவிா்க்கவும் தடுப்பூசிகள் உதவக் கூடும்.


எனவே, அதைக் கருத்தில்கொண்டு தகுதியுடைய அனைத்து நபா்களுக்கும் தடுப்பூசிகள் விரைந்து வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்தும், ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அவசியம்.


மாநில மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளி, தனி நபா் சுகாதாரம் ஆகியவற்றை மிகச் சரியாக கடைப்பிடித்தல் முக்கியம். பொது சுகாதாரத் துறை அதனை உறுதிப்படுத்த வேண்டும். ஒமைக்ரான் தீநுண்மி பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும், அதனை எதிா்கொள்ளத் தேவையான கட்டமைப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.





Post Top Ad