புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை ஆகிய இருவரும் கிராமிய கலை நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில் அருகே விலத்தூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் காளிதாஸ்(17). இவர், ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கிராமிய பாடல்களை நேர்த்தியாக பாடும் திறமையைப் பெற்ற இவர், மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கலா உத்சவ் போட்டியிலும் கலந்துகொண்டார்.
சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்ட காளிதாஸ் 2-ம் இடம் பிடித்தார்.
மாணவரின் திறமையை அறிந்த, ஆட்சியர் கவிதா ராமு இரு தினங்களுக்கு முன்பு அவரை நேரில் வரவழைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கலைத் துறையில் அதீத ஆர்வமிக்க ஆட்சியர் முன்பாக 17 ஆண்டுகளுக்கு முன்பு ஏகாதசியால் பாடப்பட்ட “ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப் போல” எனும் அம்மாவைப் பற்றிய உருக்கமான பாடலை பாடலை பாடத் தொடங்கியதும், கண்களை மூடிக்கொண்டுத, தலையை அசைத்தபடி ரசிக்கத் தொடங்கினார். பாடலும் முடிந்தது, ஆட்சியரின் கண்களும் கலங்கின.
பின்னர், எந்த பக்க வாத்தியங்களும் இல்லாமலே, அவற்றையெல்லாம் இசைத்து பாடலைக் கேட்டதைப் போன்று இருந்ததாக மாணவரை ஆட்சியர் பாராட்டினார்.
இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் காளிதாஸ் கூறியது:
”நான் சிறு வயதில் இருந்தே பாடகராக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அவ்வப்போது, பள்ளி நிகழ்ச்சிகளி பாடுவேன். கரகத்திக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தபோது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரிநாதன்தான் என்னை, புதுக்கோட்டை கிராமியக் கலைஞர் களபம் செல்லத்தங்கையாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் பயிற்சி பெற்று, அவரது 4 ஆண்டுகளாக கச்சேரிகளில் பாடி வருகிறேன். ஆவுடையார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் எனது இளைய சகோதரி ஆனந்தியும் என்னோடு சேர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளில் பாடிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியரிடம் பாராட்டு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
இதுகுறித்து செல்லத்தங்கையா கூறியது:
"கிராமியக் கலையில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்கிறது. கிராமியக் கலையில் புகழ் பெற்று விளங்கும் பாடகர் செந்தில்கணேஷூம் பள்ளி பருவத்தில் என்னிடம்தான் பாடக் கற்றுக்கொண்டார்.
காளிதாஸும் நல்ல முறையில் பாடுகிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியுள்ளார். அவரது தங்கை ஆனந்தியும் நல்ல முறையில் பாடுகிறார். இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. அவர்கள் மக்களிடம் இருந்து பாராட்டைப் பெறுவது நான் பாராட்டப்படுவதாக அறிவேன்" என்றார்.
No comments:
Post a Comment