வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா? - Asiriyar.Net

Wednesday, March 4, 2020

வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?





நாடு முழுவதும் நடைபெற இருந்த, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், அடுத்த வாரம், வங்கிகள் செயல்படும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஊதிய உயர்வு, ஐந்து நாட்கள் வேலை உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மார்ச், 11 முதல், 13 வரை, மூன்று நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மூன்று நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதனால், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 11, 12 மற்றும், 13ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற இருந்தது. வரும், 10ம் தேதி, ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால், அதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வரும், 14, 15ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், வங்கிகள் தொடர்ந்து இயங்காது என்ற, நிலை ஏற்பட்டது.ஆனால், இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் மாநிலங்களில் மட்டும், வரும், 10ல், வங்கிகளுக்கு விடுமுறை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post Top Ad