ஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு - Asiriyar.Net

Saturday, March 28, 2020

ஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு





கொரோனா' தொற்றால், உலகமே கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா திறமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவாகியிருக்கும் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டுகின்றன.இந்நிலையில், 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது.ஊரடங்கு:சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இப்போது, உலகின் அனைத்து நாடுகளிலும், தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், இந்த நோய் பரவியுள்ளது.

இதுவரை, 730க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில், கொரோனாவால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதில் இருந்தே, அதன் பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவின், பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரிலிருந்து, இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களை மீட்பதற்காக சென்ற இந்திய விமானங்கள், பின், அண்டைநாட்டினரையும் மீட்டு வந்தன.சீனாவுக்கு, 15 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

முக கவசங்கள், கையுறைகள் போன்ற உபகரணங்கள் பற்றாகுறையால், சீனா பாதிக்கப்பட்ட போது, அவற்றை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்தது. அண்டை நாடான சீனா, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில். அதற்கு நேசக்கரம் நீட்டிய, இந்தியாவின் செயல், சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.ஒருங்கிணைப்பு:இப்போது, கொரோனாவின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த, சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி, சமீபத்தில் பேசினார்.

அப்போது, கொரோனா பரவலை தடுக்க, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் இந்த முயற்சி, சார்க் நாடுகளிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.கொரோனாவால், தெற்காசியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில், 3.71 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையில், தெற்காசிய நாடுகள் எதுவும் இல்லை. எனவே, தெற்காசிய நாடுகளின் பிரதிதியாக செயல்பட, சார்க் அமைப்பால் மட்டும் தான் முடியும். உலக மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு பங்கு, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள, சார்க் நாடுகளிடம் சிறந்த மருத்துவ வசதிகள் தேவை.

இதை உணர்ந்து தான், சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விலகிவிட்டது. 'டிரான்ஸ் பசிபிக்' ஒத்துழைப்பை ரத்து செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவை, சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில், சார்க் அமைப்பை இந்தியா வலுப்படுத்தினால், சர்வதேச அளவில், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு, புதிய வழியைக் காட்ட முடியும். அண்டை நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முயற்சி, இப்போது, உலகுக்கே எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

Post Top Ad