'எண்ணும் எழுத்தும்' திட்டம் எதற்கு, ஏன்? - முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 13, 2022

'எண்ணும் எழுத்தும்' திட்டம் எதற்கு, ஏன்? - முழு விவரம்

 




தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 13-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்டம் என்றால் என்ன, எதற்கு என்று பார்க்கலாம்.


கொரோனா வைரஸ் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடுகட்டவும் அதைச் சரிசெய்யவும் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


எண்ணும் எழுத்தும் திட்டம்


2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.


கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. 


இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 3ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள், சூழ்நிலையியல் பாடக் கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.





8 வயதிற்குட்பட்ட மாணவர்கள்


இதன் காரணமாக 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர். 


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. 


இதைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக 1, 2, 3 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 13-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அதே நாளில் (ஜூன் 13-ம் தேதி) திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து அதே பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 






Post Top Ad