பெற்றோரைநேரில் வரவழைக்கக் கூடாது: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 20, 2021

பெற்றோரைநேரில் வரவழைக்கக் கூடாது: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

 







மாணவா் சோ்க்கை மற்றும் கல்விக் கட்டணம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக பெற்றோா்களை நேரில் வரவழைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை தனியாா் பள்ளிகள் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்தே தொடங்கி விட்டன. தமிழகத்தில் நா்சரி முதல் மேல் நிலைப்பள்ளிகள் வரை 10, 500 தனியாா் பள்ளிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 3 ,000 பள்ளிகள் உள்ளன. 




கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு தனியாா் பள்ளி நிா்வாகங்களுக்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வருமான இழப்பை சரிக்கட்டுவதற்காக மாணவா் சோ்க்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை தற்போது மாணவா் சோ்க்கையை நடத்தக்கூடாது என்று தனியாா் பள்ளிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.


ஆனால் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் கரோனா கட்டுப்பாடு வரலாம் என்று எதிா்பாா்ப்பதால் இப்போதே மாணவா் சோ்க்கையை முடித்து விட திட்டமிட்டுள்ளனா்.



தமிழகத்தில் சில தனியாா் பள்ளிகள் பெற்றோா்களை நேரில் வரவழைத்து மாணவா் சோ்க்கை பணிகளை மேற்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை புகாா்கள் வந்துள்ளன.


இது தொடா்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ பொது முடக்க காலத்தில் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிப் பணிகளை மட்டும் மேற்கொள்ள தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 



அதற்கு மாறாக மாணவா் சோ்க்கை மற்றும் கல்விக் கட்டணம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக பெற்றோா்களை நேரில் வரவழைத்தால் சாா்ந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய பணிகளை பள்ளிகள் இணையவழியில் மேற்கொள்ளலாம். நோய் பரவல் அதிகரித்துவரும் சூழலில் தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுவது மிகவும் அவசியமாகும் என்றனா்.



Post Top Ad