'சைலன்ட் மோடில்' கல்வித்துறை - Asiriyar.Net

Thursday, May 27, 2021

'சைலன்ட் மோடில்' கல்வித்துறை

 





தமிழக பள்ளி கல்வி இயக்குனர் பதவி, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனராக மாற்றப்பட்ட பின் துறைக்கும் மாவட்ட அளவிலான கல்வி அலுவலகங்களுக்கும் இடையே 12 நாட்களாக 'தகவல் துண்டிப்பு' ஏற்பட்டு அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.


கடந்த ஆட்சியில் கல்வித்துறையில் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் செயலாளர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர், அதற்கு அடுத்து இயக்குனர் பணியிடம் இருந்தது. தி.மு.க., அரசு பதவியேற்றவுடன் இயக்குனர் பதவியை ரத்து செய்து கமிஷனர் பதவி தொடரும் என அறிவிக்கப் பட்டது.


மே 14ல் கமிஷனராக நந்தகுமார் நியமிக்கப்பட்டார். அதுவரை இயக்குனராக இருந்த கண்ணப்பன் மாற்றப்பட்டு எவ்வித பணியும், அலுவலகமும் இன்றி தவிக்கிறார்.அரசின் இந்நடவடிக்கைக்கு அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் உட்பட கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்களிடம் வரவேற்பும், எதிர்ப்பும் உள்ளது.


இந்நிலையில் 'பிளஸ் 2 க்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும்' என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு இடையே தேர்வை எவ்வாறு நடத்துவது, 'ஆல் பாஸ்' அறிவிப்பால் பத்தாம் வகுப்பு மாணவருக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி, ஆன்லைன் கல்வி நிலவரம், அரசு பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து திட்டமிட வேண்டும்.


ஆனால் 12 நாட்களாக இதுகுறித்து கமிஷனர் அல்லது செயலாளரின் வழிகாட்டுதலோ, செயல்முறையோ எந்த மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் வரவில்லை. கண்ணப்பன் மாற்றத்திற்கு பின் ஒரு 'இ-மெயில்' கூட அனுப்பவில்லை.இதனால் கல்வி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.


புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட காக்கர்லா உஷா இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இயக்குனர் பணியிடம் ரத்து, நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கருத்துக்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad