20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு Laptop / TAB - தமிழக அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Friday, March 14, 2025

20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு Laptop / TAB - தமிழக அரசு அறிவிப்பு



சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில்,


*அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாணவர்களின் விருப்பம் போல் கையடக்க கணினி அல்லது லேப்டாப் வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


*பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும்.


*விபத்து நடக்கும் இடங்கள், சந்திப்புகள் ரூ.200 கோடியில் சீரமைத்து மேம்படுத்தப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலமைச்சரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராம அறிவுசார் மையங்கள் திட்டத்தை செயல்படுத்திட ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


*ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி என 10 ஊராட்சிகளுக்கு நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,513 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


*ரூ.40 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபுசார் காட்சி அரங்கம் அமைக்கப்படும். நடப்பாண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும். ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.


*நடப்பு நிதியாண்டில் அரசின் சொந்த வரி வருவாய் ரூ. 192 லட்சம் கோடியாகும். வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் 14.6% உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.2 % லிருந்து 1.17 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


*ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருகிறது. தேசிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9%ஆக உள்ள நிலையில் 4% மட்டுமே ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு போதிய அளவில் ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை. ஃபெஞ்சல் புயலின்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.276 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்தது.


No comments:

Post a Comment

Post Top Ad