அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல், கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் துறை, 'பள்ளி கல்வியில் செயற்கை தொழில்நுட்ப பயன்பாடு' என்ற கண்காட்சியை நடத்தியது.
இந்த கண்காட்சியில், கண்ணப்பன் பேசியதாவது:
அரசு பள்ளிகள், மாநில நிதி உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த, கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தயாராக உள்ளது.
இந்த பாடத்திட்ட மாற்றம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு செய்யப்பட்டு, 15 நாட்களில் முடிவடையும். பள்ளி கல்வியை நவீனப்படுத்த, தமிழக அரசு, 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைத்து வருகிறது.
அரசு உதவி பெறும், 500 பள்ளிகளிலும், மூன்று மாதங்களில், 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 8,000 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், 10 கணினிகளுடன் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள், இம்மாதத்திற்குள் அமைக்கப்பட்டு விடும்.
மேலும், 2,291 ஆரம்ப பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பாட்டில் பயிற்சி அளிப்பது பெரிய சவாலாகும். இதற்காக, பொறியியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணா பல்கலை பேராசிரியர் அபிராமி முருகப்பன் பேசுகையில், ''பல்கலையின் ஆய்வாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் மேம்பாடுகளை வழங்க, பல செயல்முறைகளை உருவாக்க உள்ளனர். அவற்றில் சிலர், ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.
ராமச்சந்திரா பொறியியல் கல்லுாரி தொழில்நுட்பத் துறை தலைவர் ரகுநாதன், துணை தலைவர் சரவணன், திறன் மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment