பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஒரே மாதிரியான ஆடை அணிந்துதான் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டுமென்ற உத்தரவை பிறப்பிக்க ராஜஸ்தான் பள்ளிக்கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
முன்னதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் கடந்தாண்டு செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பேசும்போது, “ஆசிரியர்கள் பலர் தங்கள் உடல் அங்கங்கள் பொதுவெளியில் பார்வைக்கு வெளியே தெரியும்படி ஆடை அணிந்து வருகின்றனர். இது சிறுவர், சிறுமிகள் மத்தியில் நன்மதிப்புகளை விளைவிக்காது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், அமைச்சரின் ஆலோசனைப்படி, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை கொண்டுவர ராஜஸ்தான் பள்ளிக்கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
அஸ்ஸாம் , மகாராஷ்டிரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சீருடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பின்பற்றி இனிமேல் ராஜஸ்தானிலும் ஆசிரியர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ராஜஸ்தானில் ஆசிரியர்கள் பலர் பள்ளிகளுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற ஆடைகளை அணிந்து வருவது அதிகரித்துள்ளதைத் குறிப்பிட்டு, கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் பேசும்போது “குடும்ப நிகழ்ச்சிகளில் உடுத்தும் ஆடைகளை கல்வி நிலையங்களுக்கு அணிந்து செல்வது ஏற்புடையதல்ல. இதனையடுத்து மாணவர் நலன் கருதி சேலை அல்லது சல்வார் கமீஸ் ஆடைகளை ஆசிரியைகளுக்கான சீருடையாக்க யோசித்து வருகிறோம்” என்றார்.
இதனையடுத்து, ராஜஸ்தானில் பள்ளி ஆசிரியர்கள் மேற்கத்திய கலாசார உடைகள் அணிந்து பள்ளிக்கு வர முடியாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களுக்கான சீருடை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment