தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி - மத்திய கல்வி அமைச்சர் - Asiriyar.Net

Saturday, February 15, 2025

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி - மத்திய கல்வி அமைச்சர்

 



தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளது.


இந்நிகழ்ச்சியை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்.


உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா? மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது.


தேசிய கல்விக் கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது.


அதனை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad