கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு. - Asiriyar.Net

Tuesday, February 18, 2025

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.

 




கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.


கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.


போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும்.


கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்.


பணியாளர்கள் அனைவரும் "குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி ஆவணத்தில் (Child Safeguarding Declaration Document) கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும்.


அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்படுவார்கள்.


மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும்.


இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்படவேண்டும்.


மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.


விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.


விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும்.


அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098 & 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும்.


’’மாணவர் மனசு புகார் பெட்டி” அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.


அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் நடக்கும் கூட்டங்களில் (School Assembly) தலைமை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, “மாணவர் மனசு புகார் பெட்டி” மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை,


குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவ/ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவேண்டும். தனிப்பட்ட புகார்கள் குறித்து அங்கு குறிப்பிடவே கூடாது.


அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.


Click Here to Download - கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க - வழிகாட்டுதல் நெறிமுறைகள் - Press Release 358 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad