திருநெல்வேலி மாவட்ட CEO-க்கு ஒரு வாரம் சிறை தண்டனை - உயர் நீதிமன்ற உத்தரவு - வழக்கு விபரம் - Asiriyar.Net

Thursday, February 20, 2025

திருநெல்வேலி மாவட்ட CEO-க்கு ஒரு வாரம் சிறை தண்டனை - உயர் நீதிமன்ற உத்தரவு - வழக்கு விபரம்

 



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த ஹெலின் ரோனிகா ஜேசுபெல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 


நான் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே பணியாற்றிய ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த பணியிடத்தில் நான் நியமிக்கப்பட்டேன்.


எனது நியமனத்தை அங்கீகரிக்குமாறு பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அதிகாரிக்குப் பரிந்துரைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்டக் கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். எனது நியமனத்தை அங்கீகரிக்க 2023-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எனது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை.


இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித் துறைச் செயலர், இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது


இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி விசாரித்து, "நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. எனவே, நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு ஒரு வார சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, வரும் 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad