அனைத்து மாணவர்களுப் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என இலவச கல்வியை வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல், இலவச பேருந்து அட்டை, இலவச புத்தகம், இலவச சைக்கிள் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் படி மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மலைப்பகுதி ஆசிரியர்களுக்கு குளிர்காலப் படி
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய இடங்கள் ஏற்கனவே மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கப்படாமல் இருந்தது.
எனவே, தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மலைவாழ் படி மற்றும் குளிர்காலப் படி வழங்கிட வேண்டி அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
இதனையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால், தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கிட அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (17.2.2025) தலைமைச் செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி அனைத்து ஆசிரியர், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் அ.சு.சரத் அருள்மாரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
48 ஆண்டுகாலமாக வழங்காத மற்றும் குளிர்கால படி ஊதியம்
இதனை தொடர்ந்துசரத் அருள்மாறன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கடம்பூர் , பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் மற்றும் குளிர்கால படி ஊதியம் 48 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது, கடந்த 2021 தேர்தலின் போது மலைவாழ் ஊழியர்களுக்கான படி ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார்.
தொடர்ச்சியாக முதல்வரிடம் படி ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கையும் வைத்திருந்தோம். இந்நிலையில் முதல்வர் 48 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி அரசாணையை வெளியிட்டுள்ளார். அதற்காக முதல்வரை சந்தித்து எங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment