நடத்தாத பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள்? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Asiriyar.Net

Wednesday, April 6, 2022

நடத்தாத பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள்? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 





பள்ளியில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் எந்த கேள்விகளும் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இரண்டு நாட்களாக நடந்தது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள், இடிக்க வேண்டிய கட்டிடங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் அடிப்படை வசதிகள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று உரிய ஆலோசனைகள் வழங்கினார்.


பின்னர் அவர் அளித்த பேட்டி: 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துதல், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கல், பள்ளிக் கட்டிடங்களின் நிலைமை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் 2 நாட்களாக நடக்கிறது. இதில், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிபடி, ‘மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த குழு கலந்தாலோசித்து ஒரு வருடத்தில் இதற்கான கொள்கையை வடிவமைக்கும். இது, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை எந்த விதத்திலும் நம்மை பாதித்து விடக் கூடாது என்ற நோக்கில்தான் தற்போது மாநில கல்விக் கொள்கை உருவாக உள்ளது.நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், கல்வி நிலைமை ஆகியவற்றை உணர்ந்து தான் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தான் குழுவில் உள்ளனர். அந்தந்த துறைகளில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்களை  வைத்துத்தான் இந்த மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட நிலையில் உள்ள நம்மிடம் தேசியக் கல்விக் கொள்கையை புகுத்த முயற்சிப்பதே தவறு. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத தனித்துவமாக நமது கல்விக் கொள்கை அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுத் தேர்வை பொறுத்தவரையில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.







Post Top Ad