தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த கொரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அரசியல் கூட்டங்கள், திறந்தவெளி கூட்டங்கள், கோயில்களில் கூட்டம் கூடுவது, பொது நிகழ்ச்சிகள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கொரோனா விதிகளின்படி, இரண்டு கட்டமாக தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் படிப்படியாக கொரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியது. பெரும்பாலான அளவில் நோய்தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதையடுத்து, தமிழகத்திலும் நோய்த் தொற்று குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளை நீக்கி பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து, ஒன்றிய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் நோய்த்தொற்று குறைந்துள்ளதாலும், தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு முதல், இரண்டு கட்டமாக தடுப்பூசிகளை முறையே 92 சதவீதம், 75 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளதாலும், தமிழக அரசு அறிவித்த நோய்க்கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.
இருப்பினும், கொரோனா நோய் தொற்று தொடர்பான அனைத்து நடைமுறைகளையும், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்டமாக சேர்வது உள்ளிட்ட பல்வேறு சுகாதார முறைகளை மக்கள் பின்பற்றவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும், அனைத்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர்கள், சென்னை நகர மாவட்ட மற்றும் நகர சுகாதார அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் மற்றும் இதர உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment