2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள EL Surrender-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? 15 நாளா? 30 நாளா? - Asiriyar.Net

Saturday, April 9, 2022

2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள EL Surrender-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? 15 நாளா? 30 நாளா?

 


2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள EL Surrender-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? 15 நாளா? 30 நாளா?


✍🏼 செல்வ.ரஞ்சித் குமார்


27.04.2020-ல் வெளியான அரசாணை எண் 48-ன்படி கோவிட்-19 பெருந்தொற்றுக் கால நிதி அழுத்தத்தை ஈடுசெய்யும் விதமாக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தமது 15 / 30 நாள்கள் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்துப் பணமாகப் பெறுவது ஓராண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அலுவலகத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு கருவூலத்தில் செயல்படுத்தத் தயாராக இருந்த விண்ணப்பங்களையும் இரத்து செய்து அந்நாள்களை ஊழியரின் ஈட்டிய விடுப்புக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த அரசாணை வெளிவந்து 9 மாதங்களுக்குப் பின்னர் இதற்கேற்ப 1933 தமிழ்நாடு விடுப்பு விதி'களின் 'அடிப்படை விதி 7A'-ல்  திருத்தம் செய்யும் பொருட்டு 08.02.2021-ல் வெளியான அரசாணை எண் 12-ன்படி 27.04.2020 முதல் ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்துப் பணம் பெறுவதை நிறுத்தி வைப்பதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டது. அடிப்படை விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டால் அதுசார்ந்த திருத்தத்தை அடிப்படை விதிகளிலும் மேற்கொள்வது என்பது வழக்கமான நிருவாக நடைமுறையே. அந்நடைமுறையின் படிதான் இந்த அரசாணை 12 வெளியிடப்பட்டது.


ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு காலம் 30.04.2021-ல் முடிவடைவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசு மீண்டும் ஒப்படைப்பு செய்ய அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.


ஆனால் 13.05.2021-ல் வெளியான அரசாணை எண் 48-ன்படி, கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாம் அலையை எதிர்கொள்ள வேண்டி மேலும் ஓராண்டிற்கு அதாவது, *31.03.2022 வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்த 2-வது நீட்டிப்புக் காலமும் தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில், இம்மாதம் ஊழியர்கள் ஒப்படைப்பு விண்ணப்பம் அளித்தாலும் அதனை ஏற்று காசாக்க வேண்டுமெனில் அதற்கு முறையான அரசாணையோ / துறை சார்ந்த அறிவிப்போ வெளிவந்தாக வேண்டும்.


ஏனெனில், சென்றமுறை அரசாணைக் கெடு முடிந்து சுமார் 15 நாள்கள் கழித்துத்தான் 2-வது முறை நீட்டிப்பிற்கான அரசாணை வெளிவந்தது. எனவே, அரசின் அடுத்தகட்ட நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அரசாணையோ / அறிவிப்போ வெளிவராதவரை தற்போதைய நிலையே தொடரும்.


அடுத்ததாக இனி விண்ணப்பிக்கலாம் என்றால், 15 நாள்களா? 30 நாள்களா? என்ற குழப்பம் சென்ற ஆண்டு முதலே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழப்பம் அரசாணை 12-ஐ முன்வைத்தே தேவையின்றி எழும்பியது.  அரசாணை 12 ஏன் வெளிவந்தது என்பதற்கான விளக்கத்தை 2-வது பத்தியிலேயே குறிப்பிட்டுள்ளேன். அதன்படியே இது தேவையற்ற குழப்பமாகவே நான் கருதுகிறேன்.


அப்படியானால். . . முதல் நிறுத்திவைப்பிற்கு அடிப்படை விதித்திருத்த அரசாணை வெளிவந்தது. ஆனால், 2-வது ஆண்டிலும் நிறுத்தி வைத்ததற்கான அடிப்படை விதித்திருத்த அரசாணை வெளிவரவில்லையே என்றால். . . ஒருவேளை இனி வெளிவரலாம்.


மேலும் 15 நாள்களா? 30 நாள்களா? என்ற கேள்வியே தேவையற்ற குழப்பம் என்பதற்கான தர்க்க ரீதியிலான விளக்கத்தை இனி பார்ப்போம்.


ஒப்படைப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ள காலம் 27.4.2020 - 31.03.2022. 


ஒருவேளை இம்மாதமே ஒப்படைக்க அரசு அனுமதியளிக்கிறது என்றால், இந்த ஏப்ரல் மாதத்தில்  ஒப்படைக்க விரும்புவோர் 15 நாள்கள் எனில் அதற்கு முந்தைய ஓராண்டின் (ஏப்ரல்'21 - மார்ச்'22) ஈட்டிய விடுப்புக் கணக்கிலும், 30 நாள்கள் எனில் அதற்கு முந்தைய இரண்டாண்டு (ஏப்ரல்'20 - மார்ச்'22) ஈட்டிய விடுப்புக் கணக்கிலும், இருந்து தான் ஒப்படைப்பு செய்ய இயலும்.


அரசாணை 12-ஐக் காரணம் காட்டி எழுப்பப்பட்டுள்ள குழப்பம் சரியானது தான் என்றால். . . . மேற்படி காலத்திற்கான ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்யவே முடியாது. அதாவது இவ்வாண்டு யாருமே தமது ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கவே முடியாது தானே! ஒருவேளை மேற்படி காலத்திற்கு முன்பே தமது ஈட்டிய விடுப்புக் கணக்கில் 15 நாள்களுக்கும் மேல் இருப்பு வைத்திருப்போர் வேண்டுமானால் விண்ணப்பிக்க இயலும்.


ஆனால் நான் குறிப்பிட வருவது அதுவல்ல.


இரண்டாண்டு காலத்திற்கு 'ஈட்டிய விடுப்புகளை ஒப்படைத்துப் பணம் பெறுவதை' மட்டும் நிறுத்தி வைத்துத்தான் அரசாணை  வெளியிடப்பட்டதே அன்றி அந்தக் காலத்தையே இனி எப்போதும் ஒப்படைப்பு செய்யவே இயலாது என்று அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.


மேலும், மேற்படி அரசாணைகளில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களான 'ஊழியரின் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைக்கவும்' என்பவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால். . .


அரசாணை வெளிவந்த அன்றைய தேதியில், Pay Drawing Officer ஊழியரின் EL-ஐ ஒப்படைப்பு செய்ய Proceedings வெளியிட்டிருந்தாலும் / EL Surrender Bill தயார் செய்யப்பட்டு Treasury-ல் விடுவிக்கத் தயார்நிலையில் இருந்தாலும் அவற்றையெல்லாம் இரத்து செய்து அந்நாள்களை மீண்டும் அவ்வூழியரின் ஈட்டிய விடுப்புக் கணக்கிலேயே வரவு வைத்துவிட வேண்டுமென்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதாவது அவ்வரிகள். . . டிப்போவிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு கிளம்பிய & பஸ்ஸ்டாண்டில் இருந்து ரூட்டுக்கு கிளம்ப தயாரா இருந்த பஸ்ஸுகள திரும்ப டிப்போவுக்கே அனுப்பீருங்க என்ற அறிவிப்பைப் போன்றது.


எனவே தான் அரசாணை 12-ஐ முன்வைத்து எழுந்த குழப்பம் தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளேன். இவையாவும் தனிநபரான எனது அறிவிற்கெட்டிய தெளிவு மட்டுமே.


ஒருவேளை நாளையே மீண்டும் EL-ஐ ஒப்படைப்பு செய்ய அனுமதியளிக்கப்பட்டாலும், ஈட்டிய விடுப்புக் கணக்கு ஒப்படைப்புக் குழப்பம் தொடர்பான கேள்விகள் அலுவலகத்திலோ / கருவூலத்திலோ எழாமல் இருக்க வேண்டுமானால். . . மேற்கொண்ட குழப்பத்தையும் தெளிவிக்கும்படியான துறைரீதியான அறிவிப்போ / அரசாணையோ வெளிவருவதே ஒரே தீர்வு.


அத்தகைய தீர்வை நோக்கி ஆசிரிய & அரசு ஊழியர் இயக்கங்கள் நகர்ந்தாக வேண்டியது காலத்தின் தேவை.

Post Top Ad