ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு - தமிழக அரசு - Asiriyar.Net

Sunday, December 19, 2021

ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு - தமிழக அரசு

 





தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2016ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது, ‘பொங்கல் பரிசு’ வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது, சுமார் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட பொங்கல் தயாரிக்கும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இரண்டு ஆண்டுகள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற 2022ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்படுகிறது.


கூடுதலாக ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கரும்பு வாங்க மட்டும் கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களும், விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து, பொங்கல் தொகுப்பு கொள்முதல் செய்யும் பணிகளில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad