மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற, கூடுதலாக இரு துறை தேர்வுகள் எழுதியிருக்க வேண்டுமென, விதிமுறைகள் மாற்றியதால், தகுதியுள்ளோர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற, நான்கு துறை தேர்வுகளில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, தற்போது வரை இரு முறை மட்டுமே, துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டன.
புதிய துறைத்தேர்வுகள் குறித்து அறிவிக்காததால், தகுதியுள்ள பலர் இத்தேர்வு எழுதவில்லை. எனவே, கலந்தாய்வு விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா கூறியதாவது :
கொரோனாவுக்கு ஊரடங்கு அறிவித்த, இரு மாதங்களுக்கு முன்னர் தான், புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டன. அரசிதழில் வெளியான அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் சென்றடையவில்லை.
பதவி உயர்வு தடைபட்டால், சீனியாரிட்டி பாதிக்கப்படும். ஆசிரியர்கள் சிலர், நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்ந்தால், காலியிடங்களை நிரப்ப முடியாமல் நிர்வாக பணிகள் தேக்கமடையும். இச்சிக்கலுக்கு அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment