ஒருவரிடம் இருந்து சொத்தை வாங்கியதும் அந்த சொத்து நமக்கு உரிமையுடையது என்பதை உறுதி செய்யும் ஆவணமாகிய பத்திரப்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
சொத்து அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும். சிலர் சொத்து மதிப்பை குறைவாக குறிப்பிட்டு பத்திரப்பதிவு செய்வதற்கு முற்படுவார்கள். அது பிரச்சினையை ஏற்படுத்தி விடும். வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.
முத்திரைத்தாளில் வாங்கும் இடத்தின் அளவு மற்றும் அதன் நான்கு புற எல்லைப்பகுதி பற்றிய விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். அத்துடன் சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும். அதில் பிழை எதுவும் இருக்கிறதா என்று சரிபார்ப்பது அவசியம்.
அவசர கதியில் பத்திரப்பதிவு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பிழைகள் ஏற்படுவதை பெரும்பாலும் தடுக்கும். இல்லாவிட்டால் மீண்டும் பிழை திருத்த பத்திரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும்.