'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள் - Asiriyar.Net

Friday, April 19, 2019

'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள்



கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், 35; பெரம்பலுார், தனியார் மருத்துவ கல்லுாரி, உதவி பேராசிரியர். நேற்று காலை, 11:00 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த கோபிநாத், அலட்சியமாக இருந்த ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான, சர்கார் பட பாணியில், '49 பி' விதியின்படி, '17 - பி' படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, '17 - ஏ' படிவத்தில், அவரது ஓட்டை, கோபிநாத் பதிவு செய்தார்.
இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது; அவருக்கும், '49 பி' விதியின் கீழ் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து, தேர்தல்அதிகாரிகள் கூறியதாவது:கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், 'பான் கார்டு' ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின், கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன.


ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது.'சிசிடிவி' கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


 கடலுார் மாவட்டம், சிதம்பரம் லோக்சபா தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவதராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன், 32, என்பவரது ஓட்டும், அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.

குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச்சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, '49 பி' விதியின் கீழ் ஓட்டளித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், '49 பி' ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

Post Top Ad