அரசுப் பள்ளியில் ஆய்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேண்டுகோள் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 13, 2022

அரசுப் பள்ளியில் ஆய்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேண்டுகோள்

 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13-6-2022) அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் நலன் கருதி வெளியிட்டுள்ள வேண்டுகோள்:


கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நான், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வினை மேற்கொண்டு, மாணவ, மாணவியர் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் கல்வி பயிலத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினேன்.


பள்ளி மாணவ, மாணவியர் விடுமுறைக்குப் பின்னர், புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில், அந்தப் பள்ளியில் சுற்றுப்புற சுகாதாரம், குடிநீர் வசதி, தூய்மையான கழிவறைகள் ஆகியவற்றைச் சரிவர பராமரிப்பதை உறுதி செய்திட வேண்டுமென்று அங்கிருந்த ஆசிரியர்களுக்கு மற்றும் அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தினேன். அதேபோன்று, அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தையும் பார்வையிட்டு, அங்கிருந்த பணியாளர்களுடன் உரையாடினேன்.  அப்போது, அங்கு கல்வி பயில்வோருக்கு நல்ல தரமான உணவு தயாரித்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.


மாநிலம் முழுவதும் உள்ள கல்விக் கூடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இருந்தால்தான், அங்கு கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் முறையாக நடைபெறும்.  எனவே, கட்சி சார்பற்ற முறையில், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் அவரவர்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது பார்வையிட்டு, மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகளை குறிப்பாக ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து, அவற்றைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


குறிப்பாக, மாணவச் செல்வங்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகள் மூடியிருப்பதையும்,   அதேபோன்று, குடிநீர்த் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதையும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் அவ்வப்போது கண்காணித்து வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் மேற்படி அறிவுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

Post Top Ad